தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப் படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4356151 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பற்றி அறிய 94450 14450, 94450 14436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், திருக்கழுக்குன்றம்- செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு சாலை வழியாக கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் பயணிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.