தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வகைதொகையின்றி எவரெஸ்ட் போல் உயர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பொது இடங்களுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு பதிலாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பே மூடுவது குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை 21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை வரும் 10ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 4-வது வாரத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.