தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% சொத்துவரி உயர்கிறது. 600 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களுக்கு 75% சொத்துவரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம். 1801 சதுர அடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காலி மனை வரி விதிப்பை 100 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதால் சொத்துவரி சீராய்வு நடைமுறைகள் முடிவுக்கு வரும்வரை புதிதாக பெறப்படும் காலி மனை வரிவிதிக்க கோரும் விண்ணப்பங்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி பரிசீலனை செய்து பல்வகை ரசீது தற்காலிகமாக வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.