பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், புற்றுநோய்க்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்ட செல்வவிநாயகம், “உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க வேண்டும். புற்றுநோயால் குணமடைவோரின் விகிதம் இந்தியாவில் 65 சதவீதமாகவும், மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதமாகவும் உள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோயால் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ஆண்கள் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு லட்சம் பேரை சோதித்தால் அதில் 97 பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அதிலும் ஒரு லட்சம் பேரில் 63 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் புற்றுநோயின் சாதாரண அறிகுறிகளை புரிந்துகொண்டு ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் புற்றுநோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது நல்லது. பசியின்மை, தொடர் இருமல், உணவு விழுங்குவதில் சிரமம், மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்து மலம் செல்வது, மலச்சிக்கல், சிறுநீர் அவசரமாக வருவது, அடிக்கடி சிறுநீர் வருதல், உடல் எடை வெகுவாக குறைதல், நிறம் மாறுதல், பாலின உறுப்புகளில் ரத்தம் கசிதல், அளவுக்கு அதிகமாக சோர்வு, நீண்ட நாட்களாக உள்ள புண்கள், கட்டிகள் அளவு பெரிதாவது போன்றவை இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.
இதற்கான அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. அதாவது அனைத்து பரிசோதனைகளையும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்து கொள்ளலாம். பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதியானால் கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ஒரே வழி மது, புகையிலை போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாதாரண உடற்பயிற்சியை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் போதும். அதேபோல் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.