தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திற்கு 4,26,270 கொரோனா தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் சென்னை வருவதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 1,26,270 கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று காலை 10 மணிக்கும், 3,00,000 கோவிஷில்டு தடுப்பூசிகள் இன்று மாலை 5.20 மணிக்கும் சென்னை வருகிறது.