தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தில் 11,42,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,976 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனை தடுப்பதற்கு அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முழுவதும் மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படவேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் குடோனில் இருந்து தரமான பொருள்களை மட்டுமே ரேஷன் கடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தரமில்லாத பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் என்பதை ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்படி கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டு விற்பனையாளர் மீது யாரும் குறை கூறக்கூடாது. விரைவில் பாக்கெட்டில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி மட்டுமல்லாமல் மற்ற அனைத்துப் பொருள்களும் விரைவில் பாக்கெட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் இதுவரை இரண்டு லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த 12 லட்சம் பேரின் பெயர்களும் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள போலி அட்டைகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அனைத்து அட்டைகளும் நீக்கப்படும். அதனால் போலி அட்டைகளை பயன்படுத்துவோர் தாமாக முன் வந்துரேஷன் அட்டையை நீக்கிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.