வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த அசானிபுயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மதியத்திற்கு மேல் கோவை, திண்டுக்கல், தேனி, புதுவை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.