தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதியை பலரும் வழங்கி வருகிறார்கள். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதி அளித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், ஸ்டாலினை சந்தித்து முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நடிகர் ரஜினி, கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.