தமிழரசு இதழ், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள், நலத்திட்ட செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அச்சு ஊடகமாக திகழ்ந்து வருகிறது. “தமிழரசு இதழ்” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அரசின் பயனுள்ள பல தகவல்களை வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தமிழரசு இதழ் அளித்து வருகிறது.
மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களின் உரைத் தொகுப்புகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், அனைத்துத் துறைகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அனைத்துத் துறைச் சார்ந்த அறிவிப்புகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விரிவான கட்டுரைகள், மாநிலம் முழுவதிலும் அரசு நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் நேர்காணல்கள் உள்ளிட்ட வெற்றிக்கதைகள் ஆகியவை அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயனடைந்திடும் வகையில் தமிழரசு இதழில் வெளியிடப்படுகின்றன
அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்தால் தமிழக அரசின் “தமிழரசு” இதழ் இல்லம் தேடி வரும். தமிழரசு தமிழ் மற்றும் ஆங்கிலம் தனி இதழ் ரூபாய் 20 ஆகவும், ஆண்டு சந்தா ரூ.240 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கான ஆயுள் சந்தா அஞ்சல் கட்டணம் உட்பட தமிழரசு தமிழ் ரூபாய் 2000 ஆகவும், தமிழரசு ஆங்கிலம் ரூபாய் 2400 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழரசு இதழுக்கு www.tamilarasu.org என்ற இணையதளத்தில் சந்தா தொகையை நேரடியாக செலுத்தலாம்.