தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100- ஐ நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,55,474 ஆகவும், 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,907 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழக அரசு திடீர் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. அதனைப்போலவே கேரளாவில்கொரோனா எண்ணிக்கை ஒரே நாளில் 100- ஐ எட்டி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஜூன் 12ஆம் தேதி ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.