முகக்கவசம் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பிரபல சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ராதாகிருஷ்ணன், கேரளாவில் பாதிப்பு சதவிகிதம் 18 ஆக உள்ளதாகவும், தமிழகத்தில் இது 1.1 ஆக மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய திரு.விஸ்வநாதன் ஆனந்த், அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியுமென்று தெரிவித்தார்.