தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய வட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.
அவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்று தவறான வதந்தி மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அதனையும் நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் (தபால்/இணையதளம் (www.cmcell.tn.gov.in), முதல்வர் உதவி மையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் ([email protected]) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்ட படிவத்தில்தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.