தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக வருடந்தோறும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான 45வது புத்தகம் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து புத்தகம் கண்காட்சியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பின் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புத்தகம் கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தேங்கி இருப்பதாக பபாசி துணைத் தலைவரான மயில்வேலன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பிப்…16 முதல் மார்ச் 6 (இன்று) வரை காலை 11 -இரவு 8 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காலம் என்பதால் இந்த புத்தக கண்காட்சியில் 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. அதாவது தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் இணையதளத்திற்கு சென்று ரூபாய் 10 செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதனிடையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி இலவசம். இந்நிலையில் 45வது புத்தக கண்காட்சி மார்ச்-6 (இன்று) முடிவடைகிறது.