தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே இன்று முதல் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளனர். அந்த டோக்கனில் எப்போது பொருட்களை பெற வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். அந்த தேதியில் குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவர் சென்று கைரேகை பதிவு செய்து பரிசுத்தொகுப்பை வாங்கலாம்.