நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தினந்தோறும் சுமார் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் படுகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு 7 நாட்கள் காய்ச்சல் இருக்கும் என்றும், முதல் மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை காலங்களில் மட்டுமே பரவும் நோயாக இருந்த டெங்கு, தற்போது எல்லாக் காலங்களிலும் பரவுவதாக தெரிவிக்கும் மருத்துவர்கள்,வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட வர்கள் மருந்து கடைகளுக்கு நேரடியாக சென்று மருந்துகளை வாங்க கூடாது. அப்படி உட்கொள்ளப்படும் மருந்துகளால் ரத்த நாளங்களில் கசிவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால் மருத்துவரை ஆலோசித்து முறையான சிகிச்சை பெற்றால்தான் டெங்கு குணமாக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்தாலும் பகல்நேர கொசுக்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.