சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதனைப்போலவே ஆன்லைன் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் செயலிகளில் பொதுமக்கள் யாரும் கடன் பெற வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நீங்கள் வாங்கும் கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி விதித்து அதனை கட்ட தவறினால் உங்களின் அந்தரங்க புகைப்படங்களை மார்பிங் செய்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவார்கள்.எனவே உங்களது போனில் இருக்கும் கடன் செயலிகளை உடனே டெலீட் செய்துவிடுங்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.மேலும் செயலிகள் மூலமாக கடன் பெறுவதற்கு முன்பு கடன் வழங்கும் நிறுவனம் மற்றும் செயலைப் பற்றி நன்கு ஆராய வேண்டும் எனவும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.