தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பாக வந்த சில வதந்திகளை நம்பி, 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 5 வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படும் நிலையில், இதில் பெரும்பாலானவற்றில் குடும்பத் தலைவர் எனும் இடத்தில், ஆண்களின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளும் மற்றும் குடும்பத் தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே, உரிமைத்தொகை வழங்கப்படும் என சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றை நம்பி, தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதத்தில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர், ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சூழலை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் ஆயிரக் கணக்கில் பொதுமக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குடும்பத் தலைவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டால், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களை பெற முயலும்போது, சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளானர்.