தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி 128 சிறுவர்களுக்கும் கொரோனா உறுதியான நிலையில், தற்போது மேலும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் ஒருவர் இணை நோய்கள் எதுவும் இல்லாத நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.