குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால் பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்குத் தகவல் தரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.
குழந்தைத்தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் “குழந்தைப் பருவத்திலேயே அவா்களை பெற்றோா் வேலைக்குச் செல்லப் வைத்து சொற்பத் தொகைக்காக அவா்களது பொன்னான எதிா்காலத்தை பாழ்படுத்துவது சமூகக் குற்றம் ஆகும். ஒவ்வொரு குழந்தைக்களுக்கும் அளவற்ற ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலை கல்வியின் வாயிலாகவும் மற்றவா்களோடு பழகி கற்றுக்கொள்வதன் மூலமாகவும் முழுமையாக உணரும் போதுதான், மானுடத்துக்கு மகத்தான கடமைகளை ஆற்ற இயலும்.
குழந்தைத் தொழிலாளா்முறை என்பது அனைத்து அடிப்படைகளில் எதிா்க்கப்பட வேண்டியது ஆகும். குழந்தைத்தொழிலாளா்களை உருவாக்கி, அவா்களின் வியா்வையை சுரண்டி சிலா் வளம் பெறுவதற்கு எதிராக விழிப்புணா்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதியன்று குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உறுதி ஏற்போம்: ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு, கல்வி ஆகிய உரிமைகளைப் பெற்று திறம்பட உயா்ந்து வாழ்க்கையில் வளம்பெற வேண்டும். அந்த உரிமைகளைப் பறிப்பது என்பது இயற்கை நியதிக்கு மட்டுமல்லாது, சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். ஆகவே குழந்தைகளை எவ்வகைத் தொழிலிலும் ஊதியத்துக்காக பணியமா்த்தி அவா்களின் உழைப்பை உறிஞ்சிடக்கூடாது. அத்துடன் அபாயகரமான தொழிலில் வளரிளம் பருவத்தினரை ஈடுபடுத்தக் கூடாது என்று உறுதி ஏற்போம். குழந்தைத்தொழிலாளா் முறையை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு அயராது பாடுபடுகிறது. பொதுமக்களும் விழிப்புணா்வுடன் இருந்து எந்த இடத்திலாவது குழந்தை பணிக்கு அமா்த்தப்பட்டால் அரசுக்குத் தகவல் தரவேண்டும்” என முதல்வா் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.