தமிழகத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகைக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்க தொகைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், திராட்சை, போன்ற வழக்கமாக கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு முழு கரும்பும் அளிக்கப்படும் மேலும் இம்முறை கூடுதலாக மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் துணிப்பையுடன் வழங்கப்பட உள்ளது.
இதற்காக அரசு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. விரைவில் இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைகள் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக கூடுதல் பணியாளர்களை அமர்த்தி அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் படி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான மொத்த பொறுப்பும் மாவட்ட ஆட்சியரை சேரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.