பிட்காயின் என்ற பெயரில் சிலர் பொதுமக்களை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் காவல் துறையை சேர்ந்தவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பிட் பண்ட் மைன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி, ஆன்லைன் பிட்காயின் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தை கட்டி இரண்டு காவலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களை இப்படி ஆசை அறிவிப்புகளை நம்பி தங்கள் பணத்தை இழந்து ஏமாந்து உள்ளனர். இனி இது போன்ற தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு ஏமாறக் கூடாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிட்காயின் மோசடி குறித்து அவர் பேசியுள்ளார். அதில், இணையத்தளத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் பண்ண வைத்து மோசடி செய்வது நடந்து வருகிறது. அதனை நம்பி மக்கள் முதலில் சிறிய பணத்தை போடுகின்றனர். அதற்கு டபுள் அமௌண்ட் கிடைத்தவுடன் அதன் பிறகு மற்றொரு முறை மிகப் பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்கின்றனர்.
அதன்பிறகு ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. இந்தக் குற்றங்களை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவலர்களே பணத்தை விட்டு ஏமாந்து உள்ளனர். இப்படி பணத்தை இழந்தால் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். பணம் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போய்விட்டால் சர்வதேச போலீஸ் அவரை நாட வேண்டியிருக்கும். அவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியாது. சென்னையில் ஒரு காவலர் 20 லட்சமும் மற்றொரு காவலர் 30 லட்சத்தை இழந்துள்ளனர். பேராசையை தூண்டி உங்களை ஏமாத்திடுவாங்க. பேராசை பெரு நஷ்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.