தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காக வீடு தேடிச் சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்களை பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது. அதனைப் போலவே இந்த திட்டத்திற்கு லோகோ வடிவமைப்பு குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பணிமனை, விழிப்புணர்வு கலைப்பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் சேவையாற்ற விருப்பமுள்ள முப்பத்தி எட்டு மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களை illamthedikalvi.tnscholls.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் செயல்பாடுகள் அனைத்தையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு கொண்டு சேர்ப்பது.
அதனை கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான இலச்சினை மக்கள் பங்கேற்புடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இலச்சினை (logo) உருவாக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
இதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. போட்டியாளர்கள் தங்களின் இறுதி படைப்பினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் லோகோ ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககத்ததால் இறுதி செய்யப்படும். மேலும் சிறந்த மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்து விடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு 25 ஆயிரம் ரூபாயும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.