தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை நான்கு மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தாக்கம் தலைதூக்கி வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக என்ற தடுப்பூசி மாநிலம் முழுவதும் 1,27,288 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
5 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். நர்சுகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் மட்டுமே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 10ஆம் தேதி ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலக்கை தமிழக அரசு அடையும் என்று அவர் கூறியுள்ளார்.