ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை.
ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி இத்திட்டத்தினை வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதில் முதலில் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மக்கள் அந்தந்த நாட்களில் சென்று தங்களது பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் முதலில் திருப்பூரில் 305 இலங்கை தமிழர்கள் ரேஷன் அட்டைதாரர்கள் உட்பட 7 லட்சத்து 82 ஆயிரத்து 665 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஏதேனும் புகார்கள் மக்கள் மத்தியில் இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு கட்டுப்பாட்டு அறையை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 0421 2971116, 2971173 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு இடம்பெறவுள்ள 21 பொருட்களான:
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், முழு கரும்பு ஒன்று போன்றவை துணிப்பையில் வழங்கப்பட உள்ளது.