வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அனைவரும் வீட்டிலேயே இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு செய்தால் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.எனவே மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.