தமிழ்நாட்டில் 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை, பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் கசிந்திருப்பதாக டெக்னிசான்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் மற்றும் குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள், அவர்களது உறவினர்களின் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தரவு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக டெக்னிசான்ட் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் பொதுவிநியோக திட்டத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.