தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 2022-2023 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் நாளை மறுநாள் (மார்ச் 18) ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். மீண்டும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட் தாக்கல் நேரடி முறையில் ஒளிபரப்பப்படும். கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த வருடம் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ, அவை இந்த முறையும் கடைபிடிக்கப்படும். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக 18 ம் தேதி மாலை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா?, புதிய திட்டங்கள் இடம்பெறுமா?, கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? என்பது மாணவர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.