தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து சென்னை அசோக் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகிய கொரோனா சார்ந்த பழக்கவழக்கங்களை, மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அல்லது வீடுகளில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல், சளி ஆகிய அறிகுறிகள் இருந்தால், மறைக்காமல் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இதனிடையில் இடம் வசதி இல்லாத பள்ளிகளில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆகவே கொரோனா நெறிமுறைகளையும் கடைபிடித்தால் தொற்றை ஒழித்து விடலாம்” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.