தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும். 10ஆம் வகுப்பு மார்க் குறிப்பிட வேண்டும் என்பதை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
பிளஸ் டூ மாணவர்கள் ஜேஇஇ முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் உள்ள நிலையில், அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் என புகார் எழுந்துள்ளது.
கொரோனா கால கட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தான் கொடுக்கப்பட்டது. ஆனால் மதிப்பெண் வழங்கப்படவில்லை, 2 ஆண்டுகளுக்கு பின் ஜேஇஇ தேர்வு எழுதும் போது இது போன்ற ஒரு சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது.