தமிழ்நாடு பாடத்திட்ட தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ நடைமுறைகளை கடைபிடித்து கூடுதல் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வில் முன்பே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் தமிழக கிளை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து விசாரணை முடிவில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வில் ஆய்வக உதவியாளரை நியமனம் செய்வது தொடர்பாக விதிகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யில் கடைபிடிக்கப்படும் சலுகைகளை தமிழக பள்ளிக்கல்வி பாடதிட்ட தேர்வுகளிலும் வழங்க முடிவானது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை கடைபிடித்து 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் அடிப்படையில் அரசு பொது தேர்வுகள், டிப்ளமா தேர்வு மற்றும் 8ஆம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப சலுகைகள் வழங்க, தேர்வுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.