தமிழகத்தில் மின்ஊழியர் சங்கத்தினை சேர்ந்தவர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்த அறிவித்திருந்த சூழ்நிலையில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையின் போது 23கோரிக்கைகள் அடங்கிய மனுவானது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மேலும் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு ரூபாய் 3496 கோடி இழப்பீடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தும் வீட்டாளர்கள் அதனை வேண்டாம் என விரும்பினால் கணக்கீட்டாளர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் தமிழகத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், கூடியவிரைவில் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டு வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவ்வாறு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு செய்வதற்கான பணி துவங்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.