தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு, சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இலங்கைபருத்தித் துறைக்கு தென் கிழக்கே சுமார் 40 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இதனால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் பிரதமர் இலங்கைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே ஆன நீண்ட கால பிரச்சினையினை உடனடியாக தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண உறுதியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளிடம் தீர்க்கமான முறையில் பிரச்சினையை தீர்த்திட வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்த வேண்டும். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.