தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்கு உரியது. இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை பிரதமர் நன்கு அறிவார். இந்திய கடற்படை தாக்குதலில் ஈடுபடுவது மீனவர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில் கோடியக்கரைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரவேல் என்ற மீனவர் காயமடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. மன்னார் வளைகுடா பகுதியில் மன்னார் வளைகுடா மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக இந்திய கடற்படையும் விளக்கம் அளித்து இருக்கிறது.