இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனா சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் 15 மீன்பிடி படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளன என்றும், தொடர் முயற்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடி படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே நமது மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுத்திடவும், தற்போது இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் pic.twitter.com/DaUS9Qcmzi
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 28, 2022