தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் வாயிலாக மக்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். எனினும் இத்திட்டத்தில் சேர சில நிபந்தைகள் இருக்கிறது. அந்த வகையில் இத்திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமானம் 1.20 லட்சமாக இருக்க வேண்டும். தற்போது இந்த திட்டத்தில் கொரோனா நோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து புற்றுநோய்க்கான சிகிச்சையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரேலா மருத்துவர்கள் குழு அரசு மருத்துவமனைக்கு வந்து மாற்று அறுவை சிகிச்சையை செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் 19 லட்சம் மாற்று அறுவை சிகிச்சைக்கு செலவிடப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரையிலும் 1,043 நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 225 கோடியில் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்தார். அதன்பின் பேசிய ரேலா மருத்துவமனையில் தலைவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ரேலா மருத்துவமனைக்கும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை என 5 அரசு மருத்துவமனைகளுக்கும் இடையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.