தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய ரிப்போர்ட்டை உளவுத்துறை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் முதல் பெரிய நகரங்கள் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சிகளாக அல்லது மொபைல் கேமராவில் பதிவாகி வந்தாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினர் வேகமாக செயல்படவில்லை. இதனால் ஆட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல் துறையை சேர்ந்த சில உயரதிகாரிகள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் குற்றம் நடக்காமல் தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மக்களை நேரடியாக பாதிக்கும் மற்றொரு விஷயம் புதிதாக பதவிக்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் நடத்தும் வசூல் வேட்டை தான். தேர்தலுக்கு செலவு செய்தது, சில ஆண்டுகளாக பதவில் இல்லாதது, மேலிடத்துக்கு அனுப்ப வேண்டியது என உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் டார்கெட் நிர்ணயித்து வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த பதவியில் இருந்தவர்கள் மட்டுமில்லாமல் புதிதாய் வந்தவர்களுக்கும் எந்த வகையில் கறக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அவர்கள் செய்யவேண்டிய அன்றாட பணிகள் குறித்து தெரியவில்லை என்று அந்த ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறையின் இந்த ரிப்போர்ட் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் இது நேரடியாக அவரை பாதிக்கும் வகையில் உள்ளது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டால், காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் அது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். அதனைப்போலவே கோட்டையில் இருந்து கொண்டு பல திட்டங்களை அறிவித்து இருந்தாலும், குக்கிராமம் வரை செல்ல வேண்டுமானால் உள்ளாட்சி பிரதிநிதிகள் சரியாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் அரசியல் திட்டங்கள் மக்களைச் சென்றடையாது. எனவே முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.