தமிழக முதல்வர் ஸ்டாலினை யூடியூப் சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவரை கைது செய்தனர். அதன் பிறகு இனிமேல் அதுபோல அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் ஜாமினில் வெளிவந்தார். ஆனால் மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடிபில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி “மனுதாரர் நீதிமன்றத்தில் உறுதி பத்திரத்தை தாக்கல் செய்த இரண்டாவது நாளை மீண்டும் அவதூறாக பேசியுள்ளார்.
இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை மனுதாரர் மீறியது உறுதியாகிறது. ஆகவே சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லமல் யூடியூப் ஒப்பந்த விதிகளை மீறும் போது சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்பட்டால் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி புகழேந்தி கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவர்களும் குற்றவாளிகளே என்றும் நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.