தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுவாக ரேஷன் அட்டைதாரர்கள் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த கைரேகை பதிவு செய்யும் முறையில் பல குளறுபடிகள் மற்றும் இயந்திர கோளாறு பிரச்சனைகள் இருந்ததால் இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அரசிடம் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பயோமெட்ரிக் முறைக்கு பதில் கண் கருவிழி பதிவு செய்து பொருட்களை விநியோகிக்கும் முறை விரைவில் கொண்டுவரப்படும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சோதனை முறையில் கண் கருவிழி பதிவு முறை சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு முறை விரிவு படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.