தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஏலக்காய், முந்திரி, வெல்லம், பச்சரிசி, திராட்சை, மஞ்சள்தூள், பாசிப்பருப்பு, நெய், மிளகாய் தூள், சீரகம், கடுகு, மிளகு, மல்லி தூள், கோதுமை மாவு, புளி, உப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு உட்பட 21 வகையான பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
ஆனால் இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் தான் பொங்கல் பரிசாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் இந்த மாதம் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொருள்களில் கோழி இறகுகள், வண்டுகள், புழு, எலி கழிவுகள் உள்ளிட்டவை இருந்ததாக ரேஷன் அட்டைதாரர்கள் கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருள்கள் அளவு குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ரேஷன் கடையில் தரமற்ற அரிசி தான் வழங்கப்படுகிறது. ஏன் என்று கேள்வி எழுப்பினால் விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் செல்லுங்கள் என்று கடை ஊழியர்கள் பதில் அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களும் மனிதர்கள் தானே அதை மனதில் வைத்துக் கொண்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.