தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர், வேலூர், கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதும் அவ்வப்போது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு திண்டிவனம் பகுதியில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் வருவாய் மற்றும் நுகர்வோர் பொருள் வாணிபம் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் திண்டிவனம் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் திண்டிவனம் அருகே கட்டளை கிராமத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் சோதித்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி 218 மூட்டை லாரியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து மாவட்ட நுகர்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் சில ரேஷன் கடைகளில் கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஊழியர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களுடைய பகுதிகளில் ரேஷன் கடைகளில் உள்ள இருப்பு விவரங்கள் குறித்து அவ்வப்போது தெரிந்து கொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.