தமிழக ரேஷன் கடைகளில் முதலில் மாதம்தோறும் பொருள்கள் வாங்கும்போது உரிய பதிவேட்டில் பதிவு செய்தபிறகு பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்கும் போது தங்களின் கைரேகையை பதிவு செய்வது அவசியம். அதனால் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டது. முதலில் இந்த முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சிலரின் கைரேகை சரியாக பதிவாகவில்லை. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் பொருள்களை தர மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்பட உள்ளது.
இந்தத் திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதையடுத்து நகரப் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்கள் சிரமமில்லாமல் பொருட்களை வாங்கிச் செல்ல முடியும்.