தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனால் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயை ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து இந்த தொகையை வழங்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.