ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட்டு வந்த துணிப்பை தட்டுப்பாடு காரணமாக பல கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதன் காரணமாக பொதுமக்கள் பலரும் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இதுவரை 45.1 % குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பைகள் இன்றி பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பின் பைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.