தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சோப்பு, உப்பு, டீத்தூள் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தை சாராத பொருள்களை வாங்கச் சொல்லி மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை ரேஷன் கடைக்கு அனுப்பி பொருள்களை பெறக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் யாரும் சரியாகப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலமாக பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கான படிவத்தை ரேஷன் கடைகளில் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தை சாராத கட்டுப்பாடற்ற பொருள்கள் எக்காரணத்தை கொண்டும் கட்டாயப்படுத்தி விநியோகம் செய்யக்கூடாது.
அந்தப் பொருள்களை ரேஷன் அட்டைதாரர்கள் தாமாக முன்வந்து பெற விரும்பினால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதனை வினியோகம் செய்யும் போது அவற்றுக்கு என தனியே கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான ரசீது வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்தப் பொருள்கள் பொதுவினியோக திட்டத்தில் அடங்காது. அதனால் மென்பொருள் படி பொது வினியோகத்தில் குறுஞ்செய்தியில் இணைப்பதற்கு வழிவகை இல்லை. எனவே ரசீது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.