தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பிளாஸ்டிக்கை தவிர்த்து துணை பைகளின் உபயோகத்தைக் பொதுமக்களிடம் மீண்டும் கொண்டுவரும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகள் மூலமாகவும் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் சேர்த்து மஞ்சப்பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவைப் பிறப்பிக்கப் பட்ட பிறகும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து இன்னும் மறையவில்லை. தற்போது துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால் பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்து விடும்.
அதனால் தமிழக அரசு அறிவித்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்கும்போது மக்களுக்கு இலவசமாக துணிப்பை வினியோகம் செய்வதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் துணி உற்பத்தி சார்ந்த நெசவாளர்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன் பெறுவார்கள். இதனை ரேஷன் கடைகளில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.