தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதே சமயம் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே கைரேகை பதிவு முறை நடைமுறையில் இருந்த நிலையில் அதில் பல தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் மக்கள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு தற்போது கண் கருவிழி சரிபார்ப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,ஏற்கனவே கைரேகை மூலமாக நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கான திட்டம் அமலில் உள்ளது.
ஆனால் கிராமப்புறங்களில் பணி செய்பவர்கள் கைரேகை அழிந்து விடுவதாக புகார் தெரிவிக்கும் நிலையில் அவர்களுக்கு பதிலாக குடும்பத்தில் வேறு ஒருவர் பொருட்களை வாங்கும் வகையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு வந்தது.தற்போது மேலும் ஒரு புதிய திட்டமாக கண் கருவிழி மூலம் சரிபார்ப்பு முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொதுமக்களின் மத்தியில் வரவேற்பு பெரும் பட்சத்தில் தமிழக முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.