தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைக்க தேவையான மண் பானையை வைக்க வேண்டும் என்று மண் பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அதுதான் நம்முடைய பாரம்பரியமும் கூட. ஆனால் பெருநகரங்களில் பலர் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் பழக்கம் பெரும்பாலும் கிராமங்களில் மட்டுமே இருந்து வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் மண் பானை செய்யும் தொழிலாளர்களிடம் இருந்து மண்பானையை கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வழங்குமாறு மண்பானை தொழிலாளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப் படவில்லை. இதனால் மண் பானை செய்யும் தொழிலாளர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டாவது மண்பானை அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் மண்பானையை செய்து வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் மண்பாண்ட தொழில் செய்து வருபவர்கள் அரசுக்கு இப்படி ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.