தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. இருப்பினும் பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஜனவரி 31-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து இப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையிலும் ஏராளமான பொங்கல் பரிசு தொகுப்பு மீதம் உள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மீதம் உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் பொருள்களின் தரத்தை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.
அதன்பிறகு அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் தங்கியிருப்பவர்களுக்கு அந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கலாம். அதோடு மட்டுமில்லாமல் அரசு மனநல காப்பகத்தில் உள்ள குடும்பங்கள், தொழு நோயாளிகளுக்கான காப்பகங்களில் உள்ள குடும்பங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கலாம்.
மேலும் அம்மா உணவகம், சமுதாய சமையல் கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும், ஊரக குடிசை பகுதிகளில் வசிக்கும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொங்கல் பரிசினை வழங்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.