தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக 2 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுகின்றனர். தற்போது ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகள் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு கடந்த 30-ஆம் தேதி தங்கதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கூட்டுறவு சங்கங்களில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது 9884000845 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.