தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையில் ஊழியர் பற்றாக்குறையால் ஒரே நபர் 2, 3 கடைகளை கூடுதலாக கவனிக்கிறார். அதிக பணிச்சுமையால் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காராணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் கடைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 100-200 பேரை நியமிக்க மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் 2020-2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தி ஆட்கள்தேர்வு செய்யப்பட இருந்தனர். இந்த ஆள்சேர்ப்பு நிலையங்கள், கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ரேஷனில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் வரை அரசியல்வாதிகள் வசூலித்தனர். அதிக புகார்கள் எழுந்ததால் நேர்காணல் முடிந்த நிலையில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதன்பின் 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து 3,331 விற்பனையாளர்கள், 666 எடையாளர்கள் பணி இடங்களை நிரப்ப முன்பே வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படும். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பட்டியல் பெற்று, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா 3-வது அலையால் ஊழியர் நியமனம் பணி தாமதமானது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ரேஷன் ஊழியர்கள் தேர்வை வெளிப்படையான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறினார்.